விசுவநாதன் ஆனந்த் - Viswanathan Anand
[ed: an English version of this article can be seen here: http://www.chess.com/article/view/viswanathan-anand]
சித்திரை மாதம், இருபத்தி ஏழாம் நாள், இரண்டாயிரத்திப் பத்து: பல்கேரிய நாட்டின் தலை நகரமான சோபியாவில், நில மடந்தையின் சீராரும் வதனமான பாரத மாதா எழில் நடம் புரிந்தாள். அவ்வதனத்தின் திலகமாம் திராவிட நல் திருநாடு பளிச்சிட்டு ஒளி வீசியது. அத்திலகத்தின் நறுமணமாம் தமிழ் அன்னையோ ஈன்ற பொழுதிற் பெரிதுவத்து என் மகன் விசுவநாதன் ஆனந்த் சதுரங்க விளையாட்டில் ஈடு இணை இல்லாத உலக சாதனை படைத்துள்ளான் என்று திக்கெட்டும் பறை சாற்றி மெய் சிலிர்த்து நின்றாள்.
கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தான் பிறந்த தேசமான இந்தியாவிற்கும், தனது தாய் தமிழ் நாட்டிற்கும் இனையற்ற பெருமையைத் தேடித்தந்திருக்கும் விசுவனாதன் ஆனந்தின் சாதனைகளைப் பற்றி நமது இனிய தமிழ் மொழியில் சில வார்தைகள் கூற விழைகிரேன்.
ஆனந்த் பல்கேரிய நாட்டை சேர்ந்த ’டொபலொவ்’ என்ற வீரரை வீழ்த்தி, நான்காவது முறையாக உலக கோப்பை செஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார். ஆனந்தின் இந்த அபாரமான சாதனையை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் செஸ் டாட் காம் இணயதளம் என்னை இந்த வார கட்டுரையை தமிழில் எழுதக் கேட்டு கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
பன்னிரெண்டு சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் சுமார் ஆறு மணி நேரத்திற்க்கு மேல் இரண்டு போட்டியாளர்களும் மிக கடுமையாக போராடினார்கள். உலகம் எங்கும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் இப்போட்டியை கணிணி மூலம் சதுரங்க வலைதளங்களுக்கு சென்று கண்டு மகிழ்ந்தனர். பதினொராவது சுற்றின் முடிவில் இருவரும் தலா ஐந்தரை புள்ளிகள் எடுத்து சம நிலையில் இருந்தது போட்டியின் கடைசி நிமிடம் வரை மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியது. . இறுதி போட்டியில் ஆனந்த் கருப்பு காய்களை கொண்டிருந்தாலும், மனம் சற்றும் தளராமல் ஒரு அதி நவீன கணிணியைப் போல தனது மூளையை பயன்படுத்தி வெற்றி பெற்றார்.
ஐஸ்லாண்ட் நாட்டில் எரிமலை வெடித்ததினால் ஏற்பட்ட புகையின் காரணமாக ஐரோப்ப நாடுகளில் விமான போக்குவரத்து தடைபட்டது. இதனை அறியாத ஆனந்த், தனது மனைவி அருணா, மற்றும் அவருடன் இப்போட்டிக்கு உதவி செய்ய வந்த மற்ற வீரர்கள் அனைவரும் ஃபரான்க்ஃபர்ட் விமானநிலையத்தில் வந்திறங்கினர். எந்த விமானமும் பணி புரியாததால் இரண்டு மணி நேரம் செல்ல வேண்டிய பிரயாணம் ஆனந்த் குழுவினருக்கு, சாலை வழியாக பயண ஊர்தியில் நாற்பது மணி நேரத்திற்கு மேல் ஆயிற்று. அதே சமயம் ஆனந்த் டொபலொவின் தாய் நாடான பல்கேரியாவில் விளையாட ஒப்புக்கொண்டிருக்க கூடாது என்றும், இந்தியாவிலோ அல்லது வேரொரு நடுத்தர நாட்டிலோ தான் இந்த போட்டியை விளையாடியிருக்க வேண்டும் என்றும், பலர் மத்தியில் எண்ணம் இருந்தது. இத்தனை தடங்கல்களுக்கு மத்தியில் ஆனந்த் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மகாகவி பாரதியின் இந்த வரிகளைத் தான் ஞயாபகப்படுத்துகிறது.
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,
அச்சம் இல்லை அச்சம் இல்லை, அச்சம் என்பதில்லையே!
"இச்சகத்தில் உள்ளொரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சம் இல்லை அச்சம் இல்லை, அச்சம்என்பதில்லையே!"
இந்த போட்டியின் பிற்ப்பாதியில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்கள் சிலவற்றை நான் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறென்
.
ஆனந்தின் இந்த சாதனையைப் பற்றி தமிழில் படித்ததில் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்று எண்ணி முடித்துக் கொள்கிறேன்
.